நன்றி குங்குமம் தோழி
இந்திய சிற்பக்கலை வரலாற்றில் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர் சில பெண்கள். கனக மூர்த்தி, ஜாசு ஷில்பி, மீரா முகர்ஜி, உஷா ராணி போன்ற பல பெண் சிற்பக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினாலும் ஒப்பிட்டளவில் சிற்பக் கலைத்துறையில் பெண்கள் குறைவாகவே உள்ளனர். இதற்கு சமூகம் மற்றும் தொழில் ரீதியான தடைகள், குறைவான வாய்ப்புகள், ஊக்குவிக்க மறுப்பது போன்றவை காரணங்களாக அமையலாம். இன்றைய காலகட்டங்களில் சிற்பக் கலையில் ஆர்வமுள்ள பெண்கள் இது போன்ற
பல தடைகளை தகர்த்தே துறைக்குள் வருகின்றனர். கலை மீதான ஆர்வத்தில் கலை சார்ந்த படிப்பினை தேர்வு செய்வதிலேயே சிரமங்களை சந்தித்து, சமூகம் வகுத்த தடைகளையும் உடைத்து தன்னையும் செதுக்கி பக்குவமான கலைஞர்கள் ஆகும் சிற்பிகளும் இங்குள்ளனர். இதில் ஒருவராக திகழ்கிறார், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியின் சிற்பக்கலை மாணவி துர்கா. ஒரு பெண்ணாக சிற்பக்கலைத் துறையில் கால் பதித்து முன்னேறி செல்வதும், அதிலுள்ள சவால்கள் குறித்தும் மாணவியின் அனுபவங்களை கேட்டறிந்தோம்.
“பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு ஓவியம் வரையும் ஆர்வம் இருந்தது. பல ஓவியப் போட்டிகளில் பங்குப் பெற்று இருக்கிறேன். 12ம் வகுப்பு படிக்கும் போது ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்குப் பெற்று 40 அடி அளவில் மகாத்மா காந்தியின் படத்தை வரைந்து அதில் வெற்றி பெற்றேன். அப்போதிலிருந்தே கலை சார்ந்த படிப்பை படிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், கல்லூரி சேர்க்கையின் போது என் பெற்றோர் அதை ஊக்குவிக்கவில்லை. இதுவே என் முதல் தடையாக அமைந்தது. இளங்கலை ஆங்கில இலக்கியம் படிப்பை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருக்கும் போது நிறைய ஓவியங்கள் வரைவது, பெயின்டிங் செய்வது போன்றவற்றை செய்து வந்தேன்.
என் நண்பர்களையும் கல்லூரிப் பேராசிரியர்களையும் உருவப் படமாக வரைந்து கொடுப்பேன். “உனக்கு இது சிறப்பாக வருகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வைத்து நீ இது சார்ந்து மேலும் படி” என்று ஊக்குவித்தனர். இளங்கலை படிப்பை முடித்தவுடன், கலை கல்லூரியில் படிப்பதற்காக என்னை தயார் செய்து கொண்டேன். கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி சேர்க்கை பெற்றேன். இதற்கு முன்பு ஒருமுறை கல்லூரிக்கு சென்ற போது, அங்கு பயிலும் மூத்த மாணவர்கள் மிகவும் தத்ரூபமாக சிற்பங்களை வடித்திருந்தனர். அது என்னை வெகுவாக கவர்ந்தது. ஓவியக் கலையில்தான் ஆர்வம் இருந்தது.
ஆனால், இந்த சிற்பங்களைப் பார்த்ததும் சிற்பக்கலை பயில வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னால் இது முடியுமா என்ற தயக்கம் இருந்தது. காரணம், என்னுடன் சேர்ந்த மாணவர்கள் பலரும் ஆர்ட் ஸ்டூடியோக்களில் பயிற்சி பெற்றவர்கள். என்னைவிட சிறப்பாக செயல்பட்டனர். எனக்கு எந்த அனுபவமும் இல்லை. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக என்னால் முடிந்த சிறப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்தேன்’’ என்று தன் முதல் தடையை உடைத்து வந்ததை குறிப்பிட்ட துர்கா, சிற்பக் கலையை ஆர்வத்துடன் பயின்றுள்ளார்.
“களிமண், உலோகத் தாள்கள், மெழுகு போன்றவற்றை கொண்டு சிற்பங்களை தயாரிக்க கற்றுக்கொண்டேன். கல்லூரி பேராசிரியர்கள் எனக்கு பெரிதும் உதவினார்கள். சிற்பக் கலையை தொழில்முறையாக கொண்டு செல்வதிலும் ஊக்கமளித்தார். உலோகத் தாள்கள், மெழுகு கொண்டு சிற்பக்கலை செய்வதை கற்றுக்கொண்டாலும் களிமண்ணில் சிற்பங்களை படைப்பதையே நான் என் பாணியாக எடுத்துக்கொண்டேன்.
நான் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது கேரளா, வயநாடு நிலச்சரிவில் தப்பித்த ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியை மூன்று யானைகள் பாதுகாத்த நிகழ்வு மனம் நெகிழ செய்தது. அந்தக் கருணை நிறைந்த தருணத்தை உயிரோட்டமான கலையாக படைக்க விரும்பினேன். யானைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், களிமண் கொண்டு அதை 3D சிற்பக் கலையாக படைத்தேன். அது குறித்து செய்தி வௌியானது.
எனக்கு பாராட்டுகளும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கலைப்படைப்பை கண்காட்சிகளிலும் வைத்தேன். ஒரு கலை நினைவு பரிசாக ஒருவரிடம் இருக்கும் போது அது என்றென்றும் நீடித்திருக்கும். அதனால் நான் வடித்த யானைக் கலையினை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து பரிசாக வழங்கினேன். “இதை நீங்கதான் செய்தீர்களா..?” என்று ஆச்சர்யத்துடன் அதனை பெற்றுக்கொண்டார்.
சிற்பக்கலை பயின்று வந்தாலும் ஓவியங்களும் வரைந்து வந்தேன். எழுத்துக்கள், வார்த்தைகளை கொண்டு வரைவதும் ஒருவகை. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் பிரச்னை நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் தமிழ்நாடு என்ற பெயரை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு என்ற வார்த்தையைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை வரைந்து, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன். எளிமையான ஓவியம் என்றாலும், அந்த விஷயத்திற்காக குரல் கொடுக்கும் விதமாகவும் அமைந்தது” எனும் துர்கா சிற்பக்கலைத் துறையை தேர்ந்தெடுப்பதில் உள்ள தடைகளையும் மீறி முன்னேறி இக்கலையின் மூலம் தன் எண்ணங்களை சமூக கருத்துக்களாகவும் முன்வைக்கிறார்.
“பிற நாடுகளிலும் மாநிலங்களிலும் சிற்பக்கலை என்பது மிகவும் பொதுவானதாக இருக்கிறது. நம் மாநிலத்தில் நகரங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பெரும்பாலான கிராமங்களில் சிற்பக்கலையை தேர்ந்தெடுப்பதில் பல தடைகள் இருக்கிறது. அதையும் மீறி ஒரு பெண் வெற்றிகரமாக சிற்பக்கலைஞர் ஆகிவிட்டால் ஒரு குறிப்பிட்ட சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சிற்பக்கலை அவர்களுக்கு மட்டுமானது என்று பார்க்கிறார்கள். என்னுடைய கிராமத்தில் நான் இதுபோன்ற சிக்கல்களை சந்தித்திருக்கிறேன். அதே சமயம் என் திறமையை அறிந்தவர்கள் எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார்கள். பல தலைவர்களின் சிலைகளை வடிவமைத்திருக்கிறேன்.
தஞ்சாவூரில் பாரம்பரியமான உணவக அமைப்பில் நானும் ஒரு சிற்பக்கலைஞராக பங்காற்றியிருக்கிறேன். இதனால் படிக்கும் போதே தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறும் வாய்ப்பு கிடைத்தது. என் திறமையை தொழில்முறையாக்குவது மட்டுமே நோக்கமல்ல… சமூகத்திற்கு நான் சொல்ல நினைக்கும் சில கருத்துகளையும் என் சிந்தனைகளையும் இக்கலையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக பெண் சிற்பக்கலைஞர்கள் உருவாக வேண்டும். அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும். பெண்களுக்கு திறமையும் விருப்பமும் இருந்தாலும் இந்த துறையை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். மதிப்பு மற்றும் வேலையில்லாமல் போய்விடுமோ என்ற பயம். அதனால் குடும்பத்தினரும் ஆதரிப்பதில்லை.
நான் கும்பகோணத்தில் அசூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த பெண். என் பெற்றோருக்கு நாங்க 5 குழந்தைகள். இந்தச் சூழலில் பொருளாதார தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த துறையை தேர்ந்தெடுக்க என் வீட்டில் ஆதரவு இல்லை. இப்போது நான் சிற்பக்கலையில் முன்னேறி வருவதை பார்த்த பிறகுதான் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். சரியான முறையில் திறமையை வெளிக்காட்டினால் நிச்சயம் சிற்பக்கலை துறையில் ஜெயிக்க முடியும்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் படித்த வரிகள் என்னை சிந்திக்க வைத்தது. ‘காட்டைப் பிரித்து… காமம் விலக்கி… காலில் சங்கிலியிட்டு பழக்கிய யானை… மனிதர்களை ஆசீர்வதிக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள்’ என்ற வரிகள் ஊட்டும் சிந்தனையை சிற்பக்கலையாக படைத்தேன். இது போன்று என் சிந்தனைக்கு தோன்றுவதை சிற்பமாக படைத்து வருகிறேன். தற்போது கல்லூரியில் இறுதியாண்டு
பயிற்சியில் இருக்கிறேன். படிப்பு முடிந்ததும், தொழில்முறையாக என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த பெண் சிற்பக் கலைஞராக மிளிர வேண்டும்” என்றார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
