மாணவர்களுக்கு சமூக நீதி பற்றி பாடம்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை

சென்னை: கல்லூரியில், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் நடத்தாமல் பொது விஷயங்கள், சமூக நீதி, பெண்களின் உரிமைகள் போன்றவற்றையும், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை எழும்பூர் எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில், எத்திராஜ் கல்லூரியின் 131வது ஆண்டுவிழா மலரை வெளியிட்டார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விழா மலரை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பெண்களுக்கு சமஉரிமை உண்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. கல்வி வளர்ச்சிக்காக திருமண உதவித்திட்டத்தை அறிவித்தவர் கலைஞர்.

தற்போது கலைஞரின் வழியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சட்டப் படிப்பு படித்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும், பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு உதவிகள் செய்து வருபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கல்லூரிகளில், ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும்போது, பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் நடத்தாமல், பொது விஷயங்களையும், சமூக நீதி, பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

* சென்னையில் மேலும் 2 பெண்கள் கல்லூரி

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீட இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை கொண்டு வ ந்தவர் கலைஞர். பெண்களுக்காக பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக தான். இந்து அறநிலையத்துறையின் சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 பெண்கள் கல்லூரி தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு பேசினார்.

இன்ஜினியரிங் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி அளித்த  பேட்டியில், ‘சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்’ என்றார்.

Related Stories: