குமரியில் முக்கிய சாலைகள், பஸ் நிலையங்களில் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் இளம்பெண்கள் அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் இளம்பெண்கள் அதிகரித்துள்ளனர். இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் நகரில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை, பழனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து வந்தும் பிச்சை எடுத்து வருகிறார்கள். இது போன்று பிச்சை எடுக்கும் பெண்கள் சிலர் கைக்குழந்தைகளையும் வைத்து இருக்கிறார்கள்.

பஸ்சுக்காக நிற்கும் பயணிகளிடமும், பஸ்களில் அமர்ந்து இருப்பவர்களிடம் கை குழந்தைகளை காட்டி இவர்கள் பிச்சை எடுப்பது பரிதாபகரமாக உள்ளது. இது ஒரு புறமிருக்க 5 வயது, 6 வயதில் தொடங்கி 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளும் அதிகளவில் பஸ் நிலையங்களில் பிச்சை எடுத்து வருகிறார்கள். இரவு வரை பஸ் நிலையங்களில் பிச்சை எடுக்கும் பெண்களும், குழந்தைகளும் பிளாட்பாரங்களிலேயே படுத்து உறங்குகிறார்கள். இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கண்டித்தாலும் இவர்கள் கேட்பதில்லை. ஒரு அளவுக்கு மேல் எங்களால் கண்டிக்க முடியாது என காவல்துறையினர் கூறி விடுகின்றனர்.

வடசேரியை பொறுத்தவரை பஸ் நிலையத்துக்குள் மட்டுமில்லாமல், பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பிளாட்பாரங்களிலும் இது போன்றவர்கள் அதிகளவில் தங்கி உள்ளனர். இவ்வாறு பிச்சை எடுக்கும் பெண்கள் சிலர் வைத்துள்ள கைக்குழந்தைகள் நீண்ட நேரமாக மயக்க நிலையிலேயே உள்ளனர். இதற்கு  காரணம் என்ன? என்பது தெரியாமல் உள்ளது. நாகர்கோவில் மட்டுமில்லாமல் குமரி  மாவட்டத்தில் பல இடங்களில் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களை காண முடிகிறது. சிக்னல்களில் நிற்கும் சமயங்களிலும் வாகன ஓட்டிகளிடம் இவர்கள் கைகேயந்தும் நிலை பரிதாபகரமாக உள்ளது.

பிச்சை எடுத்து வரும் குழந்தைகள் எங்குள்ளவர்கள், இவர்களுடன் இருப்பது தாய், தந்தையர் தானா? அல்லது வேறு எங்காவது இருந்து அழைத்து வரப்பட்டு இருப்பார்களா? என்பது தெரிய வில்லை. குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் குழந்தைகள் நல அலுவலர்கள் இது போன்ற குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். இந்த குழந்தைகளை மீட்டு நல்ல முறையில் பராமரித்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: சாலையோர குழந்தைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் முறைசாரா கல்வி திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர். இது போன்ற குழந்தைகளை மீட்டு பகல் நேர பராமரிப்பு மையத்தில் சேர்த்து கல்வி அளிக்கப்படுகிறது. வெளி மாநில குழந்தைகளாக இருந்தால் அவர்களின் மொழியிலேயே பயிற்சி அளிக்கவும் ஆசிரியர்கள் உள்ளனர். இப்போது கொரோனா கால கட்டமாக உள்ளதால், பள்ளிகள் இயங்க வில்லை.

ஆதரவற்றோர், பராமரிப்பு மையங்களுக்கு அழைத்து ெசன்று தங்க வைத்தாலும் இவர்கள் இருப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால், பல குழந்தைகள் சாலைகளில் பிச்சை எடுக்க தொடங்கி இருப்பதாகவும் புகார்கள் வருகின்றன. அவற்றையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மாவட்டத்தில் செங்கல் சூளைகள், தனியார் எஸ்டேட்டுகளில் பணியாற்ற வடமாநிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் வருகிறார்கள். வயிற்று பிழைப்புக்காக அவர்களில் சில பெண்களும் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கலெக்டர் அனுமதியுடன் இதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

Related Stories: