மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா ஆணையத்திடம் ஒப்புதல் பெறவில்லை: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அனைத்து கட்சி குழு, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லிக்கு சென்றது. அங்கு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர், நேற்று காலை சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடான சந்திப்பில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையானது மேகதாது அணை கட்ட கூடாது என்பதுதான். அதனை சந்திப்பின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டு வந்துள்ளோம்.

 மேகதாது அணை கட்டுவதற்கான சரியான வழிமுறைகளை கர்நாடக அரசு செய்யவில்லை. அண்டை மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும். காவிரி ஆணையத்திடம் முழு ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அவைகளை எல்லாம் கர்நாடக அரசு கடைபிடிக்கவில்லை. எனவே ஒன்றிய அரசின் நெறி முறைகளை கர்நாடகா அரசு சரியாக கடைபிடிக்காததால், அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்காது என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றார்.

Related Stories: