மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதல்வரின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம்: ஓ.வி.ஆர்.ரஞ்சித் காங்கிரசில் இணையும் விழாவில் கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: தலித் செயற்பாட்டாளர் ஓ.வி.ஆர்.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் மாற்றுக் கட்சியினர் காங்கிரசில் இணையும் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்துரை வழங்கினார். வேளச்சேரி டி.செல்வம் வரவேற்புரையாற்றினார். தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதின் ராவன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வல்ல பிரசாத், மூத்த தலைவர் தங்கபாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில், கிஷோர் குமார், புத்தநேசன், சவுந்தர், விருகை மதிவாணன், மணிமங்கலம் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் ஓ.வி.ஆர்.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் காங்கிரசில் இணைந்தனர். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:  இந்தியா ஒன்றாய் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி கொண்டு இருக்கிறார்கள். 

  மேகதாது அணை விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் என்ன நினைக்கிறது. கர்நாடக காங்கிரஸ் என்ன முடிவெடுக்கிறது என்பது முக்கியமல்ல தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து தான் இங்கு முக்கியம். தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக முதல்வரோடு துணை நின்று அவருக்கு உறுதுணையாக இருப்போம். கர்நாடகா அரசு மின்சாரத் தேவைக்காக  அணை கட்டுவதாக ஒரு காரணத்தை சொல்கின்றனர். அப்படி அவர்களுக்கு மின்சாரம் தேவை என்றால், கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் தரட்டும். நாம் அவர்களுக்கு மின்சாரம் தருவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: