நூதன முறையில் நகை திருட்டு; தாய், மகள் மதுரையில் கைது: தனிப்படை அதிரடி

தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள நகைக்கடைக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் வந்தனர். அவர்கள், நகைகளை பார்த்துவிட்டு,  ‘எதுவும் பிடிக்கவில்லை’ என கூறிவிட்டு சென்றனர். சந்தேகமடைந்த கடை உரிமையாளர்  புன்ராம், நகைகளை சரிபார்த்தார். அப்போது, தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளான செயின், கம்மல், மோதிரங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கொருக்குப்பேட்டை போலீசில் புன்ராம் புகார்  செய்தார். இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் ஆனந்த குமார் மேற்பார்வையில் தனிப்படை  அமைத்து, நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், 2 பெண்கள் நகைக்கடைக்கு வந்து விட்டு ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி அருகே கீழ்மாதிரை கிராமத்தை சேர்ந்த சுமதி (55), அவரது மகள் பிரியதர்ஷினி (26) என்பதும், நகை வாங்குவதுபோல் நடித்து கவரிங் நகைகளை தங்க நகைகளுடன் வைத்துவிட்டு நூதன முறையில் திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பதும், சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் திருடிய வழக்குகள் இவர்கள் மீது இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், கீழ்மாதிரை கிராமத்துக்கு சென்று தாய், மகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை துணை ஆணையர் பாராட்டினார்.

Related Stories: