சிவகங்கை மாவட்டத்தை ஒதுக்கும் ஒன்றிய அரசு: ஆண்டுக்கணக்கில் கிடப்பிலே கிடக்கும் ரயில்வே திட்டங்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சார்ந்த ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு ஆண்டுதோறும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே பாதை சுமார் 90 கி.மீ அளவு மட்டுமே. மாவட்டத்தில் மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 10.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையிலிருந்தும் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. சிவகங்கையில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2  ரயில்கள் மட்டுமே சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

மானாமதுரையில் இருந்து சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் ரயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், சருகணி, திருவாடானை வழி தொண்டிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர், மேலூர் வழி மதுரை செல்லும் ரயில் பாதை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் உள்ளது. காரைக்குடி திருப்புத்தூர், சிங்கம்புணரி வழி திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் வழி தூத்துக்குடி ரயில் பாதை திட்டங்கள் என ஏராளமான ரயில்வே திட்ட கோரிக்கைகள் இருந்தும் இவற்றில் ஒன்று கூட கண்டுகொள்ளப்படவில்லை.

ஒன்றிய அரசால் சிவகங்கை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, ‘மதுரை, தொண்டி ரயில் பாதை திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். பல்வேறு வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள இதுபோன்ற மிக அவசியமான திட்டங்களைக்கூட கிடப்பில் போட்டுள்ளனர். திட்டங்களுக்கான ஆய்வு அல்லது பணிகள் தொடங்கிய நிலை என ஒவ்வொரு திட்டமும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல தினந்தோறும் 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக 2 எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. அன் ரிசர்வேஷன் பெட்டியில் சிவகங்கை நிறுத்தத்திற்கு முன்னதாகவே ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற ஊர்களிலேயே ஏராளமான பயணிகள் ஏறிவிடுவதால் அதில் நிற்க கூட இடம் கிடைப்பதில்லை. சிவகங்கை மாவட்ட ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வாடிக்கையாகி வருகிறது’ என்றார்.

Related Stories: