நீலகிரி, கொடைக்கானலில் கனமழை மரங்கள் விழுந்து கோயில், வீடுகள் சேதம்

சென்னை: தொடர் மழையால் நீலகிரி, கொடைக்கானலில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயில், வீடுகள் சேதம்ம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்த போதிலும் ஊட்டி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் தேவாலாவில் மரம் ஒன்று கோயில் மீது முறிந்து விழுந்ததில் கோயில் சேதமடைந்தது. ஊட்டி - கூடலூர் சாலையில் பைக்காரா முதல் அனுமாபுரம் வரை நான்கு இடங்களில் சாலையின் குறுக்கே ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வத்தலக்குண்டு - கொடைக்கானல் சாலையில் வடகரை பாறை அருகே சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நேற்று காலை அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பண்ணைக்காடு ஆலடிபட்டி அருகே பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ஊத்து அருகே மூளையார் பகுதியில் ஆதிவாசி குடியிருப்பு பகுதியிலும் வீடுகள் பலத்த காற்றுக்கு சேதமடைந்தன. தாண்டிக்குடி பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சில வீடுகள் சேதமடைந்தன.

Related Stories: