உள்ளாட்சி அமைப்புகள் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீர் கலந்து விநியோகம் செய்யக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து விநியோகம் செய்யக்கூடாது என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நேற்று நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், உதவி இயக்குநர் சீனிவாச சேகர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, மாவட்ட திட்டக்குழு செயலாளர் மாரிமுத்துராஜ், நகராட்சி ஆணையர் (பொ) சுகேந்திரன் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், பிடிஓக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து விநியோகம் செய்யக்கூடாது. ஒகேனக்கல் குடிநீரை ஒருநாளும், நிலத்தடி நீரை மற்றொரு நாளும் விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் என்ன தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதை, பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செயலர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெறாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து, அதனை முறைப்படுத்தி உரிய வரியை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெற வேண்டும். மேலும், பழுதடைந்த அல்லது தேவைப்படும் இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: