அதிமுக ஆட்சியில் 6 கோடி அம்போ சின்னமனூர் சுண்டக்காயன் குளத்து குடிமராமத்து பணியில் குளறுபடி: கரை உடைந்து பாசன நீர் வீணாக வெளியேறும் அவலம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை-குச்சனூர் சாலை அருகே உள்ள சுண்டக்காயன் குளத்தில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, நடந்த குடிமராமத்துப் பணிகளில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால், குளத்தின் கரை உடைந்து, தற்போது பாசன நீர் வீணாக வெளியேறுகிறது என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை-குச்சனூர் சாலை அருகே 80 ஏக்கர் பரப்பளவில் சுண்டக்காயன் குளம் உள்ளது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி தூர்வாரப்படாமலும், புதர்மண்டியும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு இருபோகம் நெல் சாகுபடிக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 25 நாட்கள் கழித்து சின்னமனூரில் உள்ள உடையகுளம், செங்குளம், கருங்காட்டான்குளம், சிறுகுளம் போன்ற நீர்நிலைகளுக்கு பாசன நீர் திறக்கப்பட்டது.

அதேபோல், சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மற்றும் குச்சனூர் இடையே உள்ள சுண்டக்காயன் குளத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த குளம் முறையாக தூர்வாரப்படாமல், புதர்மண்டி கிடந்ததால், வேகமாக  தண்ணீர் நிறைந்தது. இதனால், குளத்தின் கரை உடைபட்டு தண்ணீர் வீணாக  வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால், இப்பகுதியில் முதல் போகத்திற்கான ெநல்  சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக பாரமரிக்கப்படவில்லை. இந்த சுண்டக்காயன் குளத்திலும் குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரில் கண்துடைப்பிற்காக தூர்வாரும் பணிகள் நடந்தே தவிர, எங்கும் ஆழமாக தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. பெயருக்கு கரையை உயர்த்தி விட்டு, குளத்தை நவீனப்படுத்தி தூர்வாரியதாக, 2017-18ம் ஆண்டில், 6 கோடியே 71 லட்சத்து 70 ஆயிரம் செலவானதாக கணக்கு காட்டி விட்டார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தூர்வாரப்படாத இந்த குளத்தை முறையாக சீரமைத்து, கரையை பலப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும், என்றனர்.

Related Stories: