பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் உண்டியலை திருடி 70,000 கொள்ளை: போலீசார் விசாரணை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கணவாய், மங்கலம் ஆகிய 2 கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் 70 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் சாலையை ஒட்டி அரச மரத்தடியில் பத்ம காளியம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பூஜை முடிந்த பிறகு கோவில் பூசாரியான அபிமன்னன் (45) நேற்று காலை கோயிலைத் திறக்க வந்துள்ளார்.அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த உண்டியலை காணவில்லை. தகவலறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் சுற்றுப்பகுதிகளில் தேடியபோது, கோவிலுக்குப் பின்னால் உள்ள ஏரியில் கருவேல முட்புதர்கள் அருகே கிடந்தது தெரிந்தது.

கோயிலில் உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள் சில்வர் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை போட்டு விட்டுச் சென்றனர். உண்டியலில் சுமார் 50 ஆயிரம் இருந்ததாகவும், இதுகுறித்து பூசாரி அபிமன்னன் கொடுத்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.இதேபோல் நேற்றுமுன் தினம் வேப்பந்தட்டை தாலுக்கா, தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ஏரிக்கரையில் உள்ள பெரியசாமி காட்டுக்கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த 20ஆயிரம் பணத்தை, சில்லரைக் காசுகளை கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர். இது குறித்து கோவில் பூசாரி லட்சுமணன் கொடுத்தப் புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களைதேடி வருகின்றனர்.

Related Stories: