தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் முதல்வரிடம் அறிக்கை தாக்கல்: கல்வியாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை குறித்து கல்வியாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் ஏராளமான ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீரானது. இதனால், சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் கிடைக்காததால் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசுக்கு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த குழுவிடம் 86 ஆயிரம் பேரின் கருத்துகளை பதிவு செய்தனர். பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு தயார் செய்தது.

இந்த நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, குழு உறுப்பினர்களான மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார், பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குநர்  வசந்தாமணி, டாக்டர் ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர்நேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழுவை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, இந்த வழக்கை தொடர்வதற்கு நீங்கள் யார்? அரசின் அறிவிப்பு எந்த வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளது என்று கூறமுடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசுக்கு தரப்பட்டுள்ள தனி அதிகாரத்திற்குள் நீதிமன்றம் நுழைய முடியுமா? மனுதாரர் விளம்பரத்திற்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளாரா? என்று சரமாரி கேள்வி எழுப்பி, அவரதுமனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குழு முதல்வரிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு வெளியிடவில்லை. ஆனாலும், தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக மருத்துவ படிப்பில் சேர்ந்த மொத்த மாணவர்களில் சராசரியாக 30 சதவீதம் பேர் முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்களாக இருந்தனர்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல்தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் பெரும்பாலானோர், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து, கல்வியாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

* ‘நீட் தேர்வே வேண்டாம்’

தலைமைச்செயலகத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகையில், ‘‘நீட் தேர்வு பாதிப்பு குறித்த 165 பக்கம் முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று தான் கருத்து சொல்லியிருக்கிறார்கள். 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்து கூறியுள்ளனர். அரசியல் கட்சியினரும் கருத்து கூறியுள்ளனர். நிறைய பேர் இ-மெயில் அனுப்பியுள்ளனர். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் எந்த அளவுக்கு நீட் பாதிக்கிறது என்பதை சொல்லியுள்ளோம். சில பேர் இந்த ஆண்டு மட்டும் வையுங்கள், இரண்டு ஆண்டுகள் மட்டும் நீட் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளனர். அதையும் ஒரு கருத்தாகவும் எடுத்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: