பயிற்சி மேற்கொள்ள தடை தொடர்வதால் ஊட்டி எச்ஏடிபி மைதானம் வெறிச்சோடுகிறது

ஊட்டி : கொரோனா ஊரடங்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ள தடை இன்னும் தொடர்வதால் ஊட்டி எச்ஏடிபி., விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து மைதானங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுபடுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு 7வது முறையாக வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை  தொடர்கிறது. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் திறந்தவெளி மைதானங்களில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதி இல்லை. இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் எச்ஏடிபி., மைதானம் மூடப்பட்டுள்ளது. வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டதால் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.இந்த மைதானத்தில் சர்வதேச தரத்தில் சிந்தெட்டிக் ஓடுதளம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மண்டல, தேசிய அளவிலான போட்டிகளில் பங்ேகற்றும் வீரர், வீராங்கனைகள் ஹைஆல்ட்டியூட் பகுதியான ஊட்டியில் தங்கியிருந்து பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டை போல இம்முறையையும் மலை மேலிட பயிற்சி பெற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோல் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம், காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், ஏடிசி., காந்தி விளையாட்டு மைதானம், குன்னூர் அரசு பள்ளி மைதானம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கால்பந்து, கைப்பந்து, தடகளம் போன்ற பயிற்சிகள் பெற்று வந்த வீரர்கள் மைதானத்துக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: