சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா!: ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார் நடராஜர்.. பக்தர்கள் வழிபாடு..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி நடராஜர், சிவகாம சுந்தரிக்கு ஆராதனை முடித்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக தேரோட்டம் இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காலை கருவறையில் இருந்து நடராஜர், சிவகாம சுந்தரி சமீதபாக கொண்டுவரப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

அங்கு நடராஜர், சிவகாம சுந்தரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இதையடுத்து காலை 9 மணி முதல் நடராஜரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக சமூக இடைவெளி விட்டு வரும் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடராஜரை தரிசித்துவிட்டு வடக்கு கோபுர வாயில் வழியாக வெளியேறி வருகின்றனர்.

தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கோயிலுக்குள் சென்று நடராஜனை தரிசனம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் கூறியுள்ளனர். நாளை ஆனி திருமஞ்சன திருவிழா வழக்கமான முறைப்படி கோயில் வளாகத்திலேயே நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை மாலை ஆனி திருமஞ்சன விழா தரிசனம் முடிந்து நடராஜர் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

Related Stories: