செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க விரைவில் அனுமதி? சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் ரூ.700 கோடி செலவில் ஹெச்.எல்.எல்., பயோடெக் நிறுவனம் அமைத்துள்ளது.இந்த வளாகத்தில் ஆண்டுக்கு 585 லட்சம் டோஸ் என 12 வகையான தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க, தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு தனியார் பங்களிப்புடன், கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு, தனியார் நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை என, ஒன்றிய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், இன்று மாலை டெல்லி செல்கிறார். மறுநாள், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவை, சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெல்லி செல்லும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி; 11 மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி; செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி; கொரோனா தொற்று தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளனர். குறிப்பாக, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள மூன்று நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அதில், கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும் ஒன்று என, ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில், தடுப்பூசிகளை தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அதிக வாய்ப்புள்ளது எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: