காற்றாலை உற்பத்தி தொழிற்சாலையில் ரூ.1 கோடி டையிங் இயந்திரம் எரிந்து நாசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் காற்றாலை உற்பத்தி தொழிற்சாலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.1 கோடி மதிப்புள்ள டையிங் இயந்திரம் எரிந்து நாசமானது. கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் மின் உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரிபாகம், காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்பது உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகிறது. இந்த சிப்காட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றனர். காவலர்கள் பணியில் இருந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில், தொழிற்சாலையில் தீடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், காவலர்கள் உள்ளே சென்றனர். அங்கு தீப்பற்றி எரிந்தது. உடனே, அங்குள்ள தீயணைப்பான் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தீ மளமளவென வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள், அங்கு காற்றாலை இறக்கை தயாரிக்க பயன்படும் மெளல்டிங் செய்யும் டையிங் மெஷின் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. புகாரின்படி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: