திருச்சியில் 26,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை

திருச்சி: திருச்சியில் காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 26,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. போதைமாத்திரைகளை திருச்சி மாநகர பகுதியில் விற்பதாகவும் அந்த மாத்திரைகளை உடைத்து தூளாக்கி அதனை ஊசி மூலம் நேரடியாக உடலில் செலுத்தி கொள்வதாகவும் தகவல் வந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் ஆகியோருக்கும் தகவல் கொடுத்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சக்திதாசன் என்ற நபரை பிடித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோட்டை காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2017ஆம் ஆண்டு சக்திதாசன் தனியாக மருந்துக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது மருந்து கடைக்கு 5 வருடத்திற்கான உரிமம் இருந்துள்ளது. ஆனால் அவர் 2 வருடம் மட்டுமே நடத்திவிட்டு பின்னர் நடத்தாமல் இருந்துள்ளார். அந்த உரிமம் மூலம் அவர் இதுபோன்ற பல்வேறு மருந்துகளையும், மாத்திரைகளையும் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 70 பெட்டிகள் உள்ள 23,000க்கும் மேற்பட்ட மாத்திரைகள், உடலில் செலுத்தக்கூடிய மருந்துகளும் பாட்டில்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மலைக்கோட்டை ஜீவா நகர் பகுதியில் உள்ள குடோன் போன்ற அமைப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இவர் மருந்துகளையும், மாத்திரைகளையும் விற்பனை செய்ததாகவும், இளைஞர்கள் நேரடியாக இவரிடம் வந்து வாங்கி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: