பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரசார் சைக்கிள் பேரணி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் காங்கிரசார் சைக்கிள் பேரணி நடத்தினர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மாவட்ட வாரியாக பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இந்நிலையில், ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று 2ம் கட்டமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. அந்தந்த மாவட்ட தலைவர்கள் ஏற்பாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றிய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

அதன்படி, சென்னையில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவராஜசேகரன் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணி வாலாஜா சாலை, எல்லீஸ் ரோடு சந்திப்பில் இருந்து முக்கிய தெருக்களின் வழியாக, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வந்தடைந்தது. இதில், மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், வழக்கறிஞர் பிரிவு எஸ்.கே.நவாஸ் மற்றும் சர்கிள் தலைவர்கள் தணிகாசலம், வாசுதேவன், கராத்தே செல்வம், சந்திரசேகர், கருப்பையா, பி.செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையார் டி.துரை தலைமையில், மெரினா கலங்கரை விளக்கம் அருகே சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி, மெரினா கலங்கரை விளக்கம் அருகே தொடங்கி திரு.வி.க.பாலம் வரை நடைபெற்றது. இப்பேரணியை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் மத்திய அமைச்சர் தங்கபாலு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மயிலை தரணி, திருவான்மியூர் கதிரேசன், கண்ணன், பகுதி தலைவர்கள் ரகு சந்திரன்,ஆதி, கடல் தமிழ்வாணன், மணிகண்டன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் புரசைவாக்கத்தில் பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பைக்குகளை தள்ளிக் கொண்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்று பெட்ரோல், டீசல் போட வங்கி கடன் உதவி வழங்க கோரி விண்ணப்பம் வழங்கினர். இதனால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: