டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் டெங்கு நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர்  செல்வகுமார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயை பரப்பும் கொசு புழுக்களை உண்ணக்கூடிய மீன்களை ஏரி குளங்களில் வளர்த்து வருகிறோம். வீடுகள் மற்றும் தெருக்களில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் வல்லுனர் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2,894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளன. இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெங்கு ஒழிப்பிற்காக தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மனுதாரர் சூரியபிரகாசம் தெரிவித்தார். இதையடுத்து, டெங்கு ஒழிப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: