முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவதற்கு சாதனைப் பெண்ணின் வீடு தேடி அரசுத்துறை அனுமதி சான்று

* முதல்வரிடம் கோரிக்கை வைத்த 3 நாளில் தீர்வு

* அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்

திருவண்ணாமலை: முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுவதற்கான அரசுத்துறை அனுமதி சான்றுகளை, சாதனை பெண்ணின் வீடு தேடி சென்று அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். திருவண்ணாமலை- செங்கம் சாலை மணக்குள விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் பிரீத்தி சீனிவாசன் (37), மாற்றுத்திறனாளி. இவர், தனது 18 வயது வரை மாநில அளவில் நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்ந்தவர். தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் கனவுக்காக முயற்சித்து வந்தவருக்கு எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. அதில், பிரீத்தி சீனிவாசனின் கழுத்திற்கு கீழ் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முற்றிலும் செயல்பட முடியாமல் முடங்கினார். தன்னுடைய விளையாட்டு கனவுகள் சிதைந்தாலும், மனம் தளராத பிரீத்தி சீனிவாசன், தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய திட்டமிட்டார்.

அதற்காக, ‘‘சோல் பிரி’’ எனும் சேவை அமைப்பை நிறுவினார். அதன்மூலம், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக எண்ணற்ற பணிகளை செய்து வருகிறார். அதற்காக, கல்பனா சாவ்லா விருது உட்பட மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் தொடங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் பிரீத்தி சீனிவாசனின் சேவை அமைப்பு கடந்த 2019 டிசம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு தண்டுவடம் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு மையம் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரீத்தி சீனிவாசன் அளித்தார். இதற்கு உடனடி தீர்வு கிடைத்தது. இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பிரீத்தி சீனிவாசன் வீட்டுக்கு நேற்று நேரில் சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் செயல்படுதவற்கு தேவையான வருவாய்த்துறையின் கட்டிட உரிமம் சான்றிதழ், பொதுப்பணித்துறையின் கட்டிட நிலைத்தன்மை சான்றிதழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சுகாதார சான்றிதழ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் எந்த நேரத்திலும் வழங்க தயாராக இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு உறுதி கூறினார். அப்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: