கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பட்டியலுக்கு அங்கீகாரம்: தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், ஆணையர் குமரகுருபரனுக்கு கடிதம்

சென்னை: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட கோயில் பணியாளர்கள் பட்டியலுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், ஆணையர் குமரகுருபரனுக்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன் ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்ட போது, உத்தேசமாக 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பாக  துணை ஆணையரால் பணியாளர்கள் தொகுப்பு பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்டு பல கோயில்களில் நடைமுறையில் உள்ளன. அந்த தொகுப்பு பட்டியலின் படி பல பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன்பிறகு புதிய பணியாளர் தொகுப்பு பட்டியல் அனுப்பப்பட்ட பல கோயில்களின் தொகுப்பு பட்டியல் ஆணையர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையும் உள்ளது.

 

எனவே, கடந்த 30 ஆண்டுகளில் பல கோயில் பணியாளர்களின் பட்டியல்கள் திருத்தப்பட்டு, ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டும் அங்கீகாரம் பெறப்படவில்லை. இந்நிலையில் அனைத்து சமய நிறுவனங்களுக்கும் தற்கால தேவைக்கு தகுந்தபடி பழைய மற்றும் புதிய ஒட்டு மொத்த பணியாளர்கள் தொகுப்பு பட்டியல் தயாரித்து ஆணையரின் அங்கீகாரத்திற்கு உரிய வழி மூலம் அனுப்பபட்டு வருகிறது. ஆணையர் அத்தகைய முன்மொழிவுகளை ஏற்று அங்கீகரித்து புதிய பணியாளர் தொகுதிப் பட்டியல் அங்கீகாரம் செய்து தர வேண்டும்.தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலை சேராத மற்றும் 46 (1)ன் கீழ் உள்ள பட்டியலை சேர்ந்த கோயில்களின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்கு கீழ் ஆகும்.

இந்த கோயில்களில் குறைந்தபட்ச பணியிடங்களை  அர்ச்சகர், பூசாரி, திருவலகு, காவலர் போன்ற பணியிடங்களக்கு 7வது ஊதிய அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டால், அவர்களுக்கான குறைந்த பட்ச சம்பள செலவு மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.10 ஆயிரம். ஆண்டிற்கு ரூ.1.26 லட்சம் வரக்கூடும். அர்ச்சகர் பணியிடம் பெரும்பாலும் முழு நேர பணியிடமாக உள்ள சூழலில் பகுதி நேர ஊதிய நிர்ணயிக்க இயலாத நிலையில் மேலும் மாவட்ட கலெக்டரின் குறைந்தபட்ட ஊதிய தொகை கொடுக்க வேண்டிய சூழலில் சம்பளம் குறைக்க இயலாததாகி விடுகிறது. அவ்வாறான சூழலில் சம்பள செலவு 40 சதவீதம் மேல் ஆகி விடுகிறது. அவ்வாறான கோயில்களில் ஆணையர் சிறப்பு அனுமதி அளித்து அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

கோயில் பணியாளர் நியமனம் தொடர்பாக ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய, அனைத்து பணியாளர்களையும், கருணை உள்ளத்தோடு ஆணையர் பணி நிரந்தரம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு ஒட்டு மொத்த சிப்பந்திகள் தொகுப்பு சம்பள பட்டியலுக்கு உரிய அனுமதிக்கான கால அவகாசம் அளித்து, அதன் மீதான தணிக்கை அறிக்கைகள் பெற்று சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களின் நிர்வாகங்கள் மீது மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

Related Stories: