தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் 89 அணைகளின் நீர்மட்டம் 107 டிஎம்சியாக உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக பெய்து வரும் மழையால் தமிழகத்தில் 89 அணைகளின் நீர் மட்டம் 107 டிஎம்சியாக உயர்ந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் 89 அணைகள் உள்ளது. இந்த அணைகளில் பெரும்பாலானவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் தான் அமைந்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 36.3 டிஎம்சியாகவும், 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 23.8 டிஎம்சியாகவும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 1.9 டிஎம்சியாகவும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 3.9 டிஎம்சியாகவும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 5 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 3.9 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 1.9 டிஎம்சியாகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.8 டிஎம்சியாகவும், 2.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 2.5 டிஎம்சியாகவும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 0.9 டிஎம்சியாகவம், 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 1.5 டிஎம்சியாகவும், 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 2.8 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 6.1 டிஎம்சியாகவும், 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 1.2 டிஎம்சியாகவும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 1 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 89 அணைகளில் நீர் இருப்பு 107.12 உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், அணைகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: