அரசு மருந்தாளுநர் பணிகளில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அரசு மருந்தாளுநர் பணிகளில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்தாளுநர் பணி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. மருந்தாளுநர் பணிக்கு அடிப்படைத் தகுதி டி.பார்ம் என்றால், டி.பார்ம் மற்றும் அதை விட கூடுதலாக படித்த அனைவருக்கும் மருந்தாளுநர் பணி வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். மருந்தாளுநர் பணி நியமனத்தில் டி.பார்ம் பட்டயதாரிகள், பி.பார்ம் பட்டதாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணிக்கு இரு தரப்பினரும் விண்ணப்பித்து, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் வகையில் புதிய திட்டத்தை தயாரித்து அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: