நெடுஞ்சாலைத்துறையில் உள்ள 5 பிரிவுகளை ஒருங்கிணைக்க வேண்டும் மத்திய அரசில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு இணையாக தமிழக பொறியாளர்களுக்கு ஊதியம்: பொறியாளர் சங்கம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுக்கு கடிதம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையை மறு சீரமைப்பு செய்து, 6 மண்டல தலைமை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுக்கு கடிதம் அளித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் தீபக் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுக்கு அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பொதுப்பணித்துறை கட்டிடங்கள், நீர்வளத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் போன்ற துறைகள் மண்டல வாரிய தலைமை பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே போன்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையிலும் மண்டல வாரியாக தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நீண்ட காலமாக சங்கம் வலியுறுத்தி வருகிறது.

கட்டுமான பராமரிப்பு அலகில் 65 சதவீத பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதும், பிற அலகுகளில் போதிய பணிகளும், பிற வசதிகளும் இன்றி இருப்பதும் நெடுஞ்சாலைத்துறையை மறு சீரமைப்பு செய்வதற்கான அவசியத்தை உணர்த்துகிறது. நெடுஞ்சாலைத்துறையில் உள்ள கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள், சென்னை பெருநகர மற்றும் முதன்மை இயக்குனர் ஆகிய 5 அலகுகளை ஒருங்கிணைத்து மண்டல வாரியாக சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை ஆகிய 6 இடங்களை தலைமையிடமாகக் கொண்டு தலைமை பொறியாளர்களை மறுசீரமைப்பின் மூலம் பணியமர்த்த வேண்டும் என்று சங்கம் கோரிக்கை வைக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கும், மற்ற தொழில்நுட்பவியலாளர்களுக்கும் இணையான ஊதியத்தை கலைஞர் வழங்கினார். அதன்பின் அமைந்த அரசு குறைத்ததால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கலைஞரால் வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: