கேரளாவில் 15 பேருக்கு பாதிப்பு எதிரொலி காய்ச்சல் அறிகுறியுள்ள 15 பேரின் மாதிரி புனேக்கு அனுப்பிவைப்பு: குமரியில் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாகர்கோவில்: கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இதன் பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் ஜிகா வைரஸ் கடந்த 6ம் தேதி கர்ப்பிணி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் அறிகுறிகள் தென்பட்ட 40 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றவர்கள். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 நேற்று காலை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் களியக்காவிளை, பளுகல் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறுகையில், ‘‘கொரோனா 2ம் அலை வேளையில் களியக்காவிளையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை இணைந்து 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட பிறகு துணை ஆட்சியர் நிலையில் கூடுதல் அதிகாரி இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.   சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து வருகின்றவர்களிடம் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இது கொசுவினால் பரவுவது என்பதால் ஏற்கனவே டெங்கு பணியாளர்கள் வாயிலாக வீடு வீடாக சோதனை நடத்துகின்றனர். அவர்களிடம் குறிப்பாக எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கவும், ஜிகா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லை கிராமங்களில் இல்லை. இந்த பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களிடம் நேற்று முன்தினம் 15 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட கர்ப்பிணி, குமரி மாவட்டம் பளுகல் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்னர் வரை தங்கியிருந்தார். அதன் பின்னர் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் பளுகல் பகுதியில் இருந்து பரவியிருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன்படி இங்கு இருந்து பலரிடமும் சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: