வேலூர்-ஆற்காடு சாலை, காந்திரோட்டில் பழைய சிக்கன் விற்பனைக்கு வைத்திருந்த ஓட்டல்கள் உட்பட 4 கடைகளுக்கு நோட்டீஸ்-2 கடைகளுக்கு அபராதம்

வேலூர் : வேலூர்- ஆற்காடு சாலை, காந்திரோட்டில் பழைய சிக்கன் விற்பனைக்கு வைத்திருந்த ஒட்டல்கள் உட்பட 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கி 2 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். வேலூர் மாவட்டத்தில் ஓட்டல்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், டீ கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர்- ஆற்காடு சாலை, காந்திரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் வேலூர் ஆற்காடு சாலையில் இருந்த ஓட்டலில் காலாவதியான சிக்கன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல் மற்றொரு ஓட்டலில் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பிரிட்ஜில் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய சோதனையில் டீ கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதேபோல் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது, ஜூஸ் கடையில் பழங்கள் துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த 2 கடைகளுக்கு ₹4,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பழையசிக்கன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்திருந்தது மற்றும் பழைய உணவுப்பொருட்கள் வைத்திருந்த ஓட்டல்கள் உட்பட 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறில்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: