காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை:  அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:  காவிரி நதிநீர் பங்கீட்டில்  தமிழ் நாட்டிற்கான உரிமையைக் காக்க வேண்டும். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். வேலையின்மை, பண வீக்கம், வருமானமின்மை, விலைவாசி உயர்வு, எதிர்காலம் குறித்த கேள்விக்குறி என்று ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்திலும், ஒரு சில பிரிவினர் மக்களை மேலும் துயரத்தில் தள்ளும் வகையில் கொள்ளை லாபம் ஈட்டுவதில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியது.  

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, ஆக்கப்பூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.  விரைந்து செயலாற்றி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் வாக்குறுதியை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படுதல்,  மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய  கடன்கள் தள்ளுபடி செய்தல்,  கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற  30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்று திருப்பி செலுத்தும், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.  விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து, உரிய விலையை உடனடியாக வழங்க வேண்டும். ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: