புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் அல்லது ஜவடேகர் நியமனம்? தமிழக கவர்னர் பன்வாரிலால் திடீர் டெல்லி பயணம்: இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அவரது பதவிக்காலம் முடிவதால், புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழக அரசியல் மற்றும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆளுநரின் செயலாளர் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்தில் 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் நேற்று திடீரென டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, தமிழக ஆளுநரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. இதனால் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் சமீபத்தில் 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் மோடியின் வற்புறுத்தலால்தான் பதவி விலகியதாக கூறப்படுகிறது. பதவி விலகியவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.அதன்படி தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் அல்லது பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதில் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே தமிழக பாஜவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்குத்தான் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories: