எல்க்ஹில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு ஊட்டி நகருக்கே வந்து செல்ல வேண்டும். ஆனால், இப்பகுதியில் இருந்து நகருக்கு வரும் சாலைகள் மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இச்சாலை கடந்த பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது எல்க்ஹில் பகுதிக்கு செல்லும் சாலையை விரிவுப்படுத்தி, கான்கிரீட் சாலையாக மாற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: