தனிநபர் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு குடிநீர் பிரச்னை தீர்க்க கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்-அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

ஆம்பூர் : ஆம்பூர் அருகே தனிநபர் அரசு இடத்தை ஆக்கிரமித்ததால் குடிநீர் தொட்டி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறி விஏஓ அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.

இந்நிலையில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி  பாலூரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பணிகள் முடங்கி இருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபர் அரசு இடத்தை தனது இடத்துடன் சேர்த்து பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளார். இதனால், குடிநீர் தொட்டி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும், பேரணாம்பட்டு தாசில்தார் கோபி உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி நேற்று அப்பகுதியின்ர் விஏஓ அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற உம்ராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார்.

இருப்பினும், அங்கு இருந்தவர்கள் தாசில்தார் வந்தவுடன் அவரிடம் பேசி முடிவு செய்ய வேண்டுமென கூறினர்.

இதனால் தாசில்தார் கோபி, ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: