பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.78.47 கோடியில் 480 குடியிருப்புகள்: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில்  ரூ.45.31 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பழைய வியாசர்பாடியில் ரூ.33.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் நடைபெறும் முதல் அடிக்கல் நாட்டு விழா இதுவாகும். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சிதிலமைடந்த 180 குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.45.31 கோடி திட்ட மதிப்பீட்டில் 288 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கும், அதுபோல் பழைய வியாசார்பாடி பகுதியில் 192 சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி  ரூ.33.16 கோடி மதிப்பிட்டில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகள் தனியார் உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளது போல்  அனைத்து வசதிகளுடன் கட்டித்தரப்படும். எம்.ஜி.ஆர் நகர்  திட்டப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் 411 சதுர அடி பரப்பிலும், பழைய வியாசர்பாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 400 சதுர அடியிலும் கட்டப்படும்.

இதில் நவீன வசதிகளுடன் பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை,  தனித்தனியே  குளியலறை  மற்றும் கழிப்பறையுடன் அமைய உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே  கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். வடசென்னை நாடளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர்,   வாரிய தலைமை பொறியாளர் ராமசேதுபதி, மேற்பார்வை பொறியாளர் சுந்தர்ராஜன், நிர்வாக பொறியாளர் மனோகரன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின்  எம்எல்ஏ ஆகியோர் வியாசர்பாடியில் உள்ள டி.டி.பிளாக் திட்டப்பகுதியில் ரூ.60.60 கோடி திட்ட மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் 468 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

Related Stories: