கடந்த பிப்ரவரியில் நடந்த முறைகேடு சென்னை காலியிடத்திற்கு தேர்வு செய்து தென்காசியில் நியமனம்; ஆதிதிராவிடர் நல ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: சென்னையிலுள்ள காலியிடத்திற்கு நேரடியாக தேர்வு செய்த நபரை தென்காசியில் நியமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஆதிதிராவிடர் நல ஆணையர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரவிந்த், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலராக கடந்த 21.8.1990ல் பணியில் சேர்ந்தேன். 13.4.2013ல் பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் இரவு காவலராக பணியாற்றுகிறேன். இதற்கு அடுத்த நிலையிலுள்ள அலுவலக உதவியாளர் பதவி உயர்வுக்கு பணி மூப்பு பட்டியலில் எனது பெயர் உள்ளது.  

தற்போது தென்காசி ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் ஏற்பட்டுள்ளது. நான், 31 ஆண்டுகள் பணியை முடித்துள்ளேன். பணி மூப்பு அடிப்படையில் எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில், கடந்த பிப். 25ல் முப்பிடாதி என்பவரை நேரடி நியமனம் மூலம் அலுவலக உதவியாளராக நியமித்துள்ளனர். பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டிய காலியிடத்தை நேரடியாக நிரப்பியுள்ளனர். சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில், காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பிடும் வகையில் முப்பிடாதியை புதிதாக தேர்வு செய்துள்ளனர். பின்னர், அவரை அங்கிருந்து நேரடியாக தென்காசி அலுவலகத்தில் நியமித்துள்ளனர்.

இந்த நியமனத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதனால், எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக இந்த நியமனம் நடந்துள்ளது. எனவே, அந்த நியமனத்தை ரத்து செய்யவும், எனக்கு பதவி உயர்வு வழங்கி, அந்த இடத்தில் நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு குறித்து ஆதிதிராவிடர் நல இயக்குநரக ஆணையர், தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் ெசய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.

Related Stories: