குரூப் 1 தேர்வில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியல் வெளியிட வழக்கு

மதுரை:  தஞ்சையைச் சேர்ந்த பைரோஸ்கேம் உள்ளிட்ட 6 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்துள்ளேன். பிகாம் இளங்கலை பட்டத்தையும் தமிழ் வழியில் முடித்துள்ளேன். இதனிடையே, கடந்த 2010ல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வௌியிடப்பட்டது. இதனிடையே, குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு ஜன. 20ல் வெளியிட்டது. இதில் நாங்கள் பங்கேற்று தேர்வு எழுதினோம். தொடர்ந்து தமிழ் வழி படிப்பிற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வானோர் பட்டியல் கடந்த பிப். 9ல் வெளியானது.

இதில், தேர்வானவர்களில் பலர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை முழுமையாக தமிழ் வழியில் படிக்காதவர்கள். ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி, தகுதி இல்லாதவர்களை நீக்கி இருக்க வேண்டும். இதை பின்பற்றாமல் தேர்வு நடைமுறைகள் முடிந்துள்ளன. எனவே, அந்த அறிவிப்பை ரத்து செய்து, முழுமையாக தமிழ் வழியில் முடித்தவர்களை மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்து, புதிதாக தேர்வானோர் பட்டியலை வெளியிட வேண்டும். எங்களை அடுத்தகட்ட தேர்விற்கு அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, டிஎன்பிஎஸ்சி தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: