நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு..!

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு குழு அமைந்திருப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யூகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஜூலை 8ம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு குழு அமைக்க முடியாது என்றும், குழு அமைத்திருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் கூறி உள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு குழு அமைத்திருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. தேர்வு குறித்து ஆராய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வழக்கு 13-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: