காவிரியில் தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அடம் தமிழகத்துக்கு 5 டிஎம்சி நீர் பாக்கி: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முறையிட முடிவு

சென்னை: கடந்த ஒரு மாதமாக  காவிரியில் இருந்து தண்ணீர் திறக்காமல் தமிழகத்துக்கு 5 டிஎம்சி நீர் வரை கர்நாடகா அரசு பாக்கி வைத்துள்ளது. இந்த நீரை பெற்றுத்தரக்கோரி வரும் 14ம் தேதி நடக்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணை காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவணை காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 177 டிஎம்சி நீர் தர வேண்டும்.

ஆனால், இதுவரை தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கர்நாடக அரசு தந்ததில்லை. இந்த நிலையில் நடப்பாண்டு தவணை காலம் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இந்த தவணை காலத்தில் 9.19 டிஎம்சிக்கு பதில் 7.6 டிஎம்சி நீர் தர வேண்டும். அதே போன்று ஜூலை மாதத்தில் கடந்த 5ம் தேதி வரை 5 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், கர்நாடகா அரசு தற்போது வரை 0.89 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது. இந்த தவணை காலத்தில் 5.6 டிஎம்சி நீர் பாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 120 அடி ெகாண்ட மேட்டூர் அணையில் 77 அடி தான் நீர் இருப்பு உள்ளது. 70 அடி வரை  தண்ணீர் திறந்து விட முடியும். இந்நிலையில் மேட்டூர் அணையை நம்பி 12 மாவட்டங்கள் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது.

எனவே, குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தர வேண்டியுள்ளதால் கர்நாடகா அணைகளில் இருந்து ஒப்பந்தப்படி தண்ணீர் பெற வேண்டும். இந்த சூழலில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையில் 32 சதவீதம், கபினி அணையில் 76 சதவீதம், ஹாரங்கி அணையில் 52 சதவீதம், ஹேமாவதி அணையில் 47 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் இருந்து ஜூலை மாதத்துக்கான நீரை தாரளமாக தர முடியும். ஆனால், கடந்தாண்டை போன்று தென்மேற்கு பருவமழையால் வரும் உபரி நீரை திறந்து விடலாம் என்பதற்காக அணைகளில் தண்ணீர் திறக்காமல் கர்நாடக அரசு மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு உரிய நீரை தரக்கோரி, வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: