இது பொறுப்பல்ல, இது பணி; தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

டெல்லி: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவை 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி பதவியேற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் ஒன்றிய அமைச்சரவையில்  இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து புதிய ஒன்றிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் ஒன்றிய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள 28 பேர் மத்திய இணை அமைச்சர்கள்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழக நலனுக்காக, கலாச்சாரத்துக்காக ஒன்றிய இணை அமைச்சராக பதவி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு நன்றி. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வளர்ச்சி, கல்வியில் இன்னும் முன்னேறி முதன்மை மாநிலமாக தமிழகம் வர வேண்டும். எனக்கு வழங்கப்பட்டது பொறுப்பு அல்ல; இது பணி எனவும் கூறினார்.

Related Stories: