சுயநலத்துக்காகத்தான் பாஜக-வுடன் கூட்டணி வைத்தது அதிமுக!: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு..!!

சென்னை: சுயநலத்துக்காகவே தான் பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி வைத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறார். இரட்டை எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சென்னை கிண்டியில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இனியாவது விழித்துக்கொண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி. அது ஒவ்வா கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததால் அதிமுக படுதோல்வியை சந்திக்க போகிறது என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது தேர்தலுக்கு பிறகு அதிமுகவினருக்கு புரிய வந்திருக்கிறது. தங்களின் சுயநலத்துக்காக சனாதன சக்திகளை தமிழகத்திலே கொண்டு வந்து காலூன்றுவதற்கு வழிவகுத்த துரோகத்தை அதிமுகவினர் செய்தார்கள். இந்த சமயத்திலாவது அதிமுகவினர் விழித்துக் கொண்டு பாஜகவினரை தமிழகத்தில் இருந்து முழுவதுமாக விரட்டி அடிப்பதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றதாக சி.வி.சண்முகம் கூறும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் கூறியுள்ளார். அதிமுகவில் நவகிரக தொண்டர்கள் இருப்பதாக அவர் கிண்டல் செய்துள்ளார். அதிமுகவில் உள்ள அனைவரும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் என்றும் சசிகலா பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் செந்தமிழன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: