மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனது மனுவை நீதிபதி கௌஷிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நந்திகிராமில் தன்னை சுவேந்து அதிகாரி தோற்கடித்ததை எதிர்த்து மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜக தலைவர்களுடன் நீதிபதி கௌஷிக் சந்தாவுக்கு தொடர்பிருப்பதாக மம்தா குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவுகள் கடுமையான இழுபறிகளுக்கு பிறகு தான் அறிவிக்கப்பட்டது. முதலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாஜகவின் சுவேந்து அதிகாரி மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உடனடியாக மம்தா பானர்ஜி சார்பாக நீதிமன்றத்தை நாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையானது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கௌஷிக் சந்தா தலைமையிலான அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு மம்தா பானர்ஜி தரப்பு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். குறிப்பாக இந்த நீதிபதி ஒருதலை பட்சமாக நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர் ஏற்கனவே பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். எனவே வெளிப்படை தன்மையுடன் இந்த வழக்கு நடைபெறாது என்ற எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து அந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி கௌஷிக் சந்தா அறிவித்திருக்கிறார். ஆனால் நீதிபதிக்கும், நீதிமன்றத்தின் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், தேவையில்லாத அவதூறு பரப்பியதாகவும் தற்போது மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதமானது தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: