உள்விழி லென்சுக்கு விற்பனை வரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு தவறான தகவல் கொடுத்த அதிகாரி சஸ்பெண்ட்: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்விழி லென்சுக்கு விற்பனை வரி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தெரிவித்த வணிகவரித்துறை அதிகாரியை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பொருத்தப்படும் உள்விழி லென்சுக்கு தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய சேவை வரி சட்டத்தின்கீழ் விலக்கு அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, உள்விழி லென்சை தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்பனைக்கு தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் 3வது சரத்தில் பொது விலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: உள்விழி லென்சை மாநிலத்திற்குள் மட்டுமே விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்வதில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், வெளி மாநிலங்களுக்கு இந்த லென்ஸ் விற்பனையில் நிபந்தனை அடிப்படையில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட வரித்துறை அதிகாரி முகுந்தனிடம் விசாரித்தபோது, மாநிலத்திற்குள் விற்பனை செய்யும்போது வரி விலக்கு வழங்கப்படுகிறது என்றார். மாநிலத்தில் மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்வதில் ஏன் விலக்கு அளிக்கப்படுவதில்லை என்று கேட்டதற்கு, அவர் சரியான பதிலை தரவில்லை. மாநிலத்திற்குள் விற்பனை செய்தாலும், வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தாலும் வரி விதிக்கப்படும் என்பதை தெரிவிக்காமல் நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தந்ததுள்ளார். இதன் மூலம் அவர் தனது கடமையை செய்ய தவறியுள்ளார்.

மாநிலத்திற்குள் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு உள்விழி லென்ஸ் விற்பனை செய்யப்படும்போது விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது என்பதை வேண்டுமென்றே சம்மந்தப்பட்ட அதிகாரி மறைத்துள்ளார்.  வணிகவரித்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடு மூலம் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் உரிய விளக்கத்தை வழங்குவதற்காக வணிகவரித்துறை செயலாளரை நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்கிறது. வழக்கு விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கப்படுகிறது.

Related Stories: