உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டிய நிலை உள்ளதால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொறியாளர்கள் சங்கம் மனு

சென்னை:  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டிய நிலை உள்ளதால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொறியாளர்கள் சங்கம் மனு அளித்தது. அம்பேத்கர் பொறியாளர்கள் சங்க தலைவர் செல்வின் சவுந்தர்ராஜன், பொதுச்செயலாளர் அசோகன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு பொறியாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இன சுழற்சி முறையில் (ரோஸ்டர் சிஸ்டம்) வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2020 மார்ச் 6ம் தேதி உச்சநீதிமன்றம் பதவி உயர்வில் இன சுழற்சி முறையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தேர்வாணைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர்வினை வழங்கிட தீர்ப்பு வழங்கியது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலை நீடித்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பொறியாளர்கள் அரசு பதவிகளை அடைவது கானல் நீராகி விடும். முந்தைய அரசு சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றாத காரணத்தினால் மட்டுமே உச்சநீதிமன்றம் சமூக நீதிக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கிட நேர்ந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும்.

கலைஞர் அரசின் 6வது ஊதியக்குழுவின் ஒரு நபர் குழு மூலமாக கடந்த 2010ல் அரசு பொறியாளர்களின் தகுதியை உயர்த்தும் வகையில் ஊதிய விகிதத்தினை வழங்கினர். உதவி பொறியாளர் 15600-39100+ஜிபி 5400, உதவி செயற்பொறியாளர் 15600-39100+ஜிபி6600, செயற்பொறியாளர் 15600-39100+ஜிபி7600. ஆனால், கடந்த 2011 அதிமுக ஆட்சியில் ஊதிய விகிதத்தினை குறைத்து ஆணையிட்டது. உதவி பொறியாளர்9300-34800+ஜிபி5100, உதவி செயற்பொறியாளர் 15600-39100+ஜிபி5400, செயற்பொறியாளர் 15600-39100+ஜிபி6600. இந்த அரசாணையினை எதிர்த்து அனைத்து துறைகளை சார்ந்த பொறியாளர் சங்கங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் ஊதிய முரண்பாடுகளை களைய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதியகுறை தீர்க்கும் குழு அமைத்து தீர்வு கண்டிட ஆணையிட்டது.

ஆனால், முந்தைய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இக்குழுவையும், குறைந்த ஊதிய விகிதத்தையே பரிந்துரைக்க செய்து பொறியாளர்களுக்கு அநீதி இழைத்து விட்டது. ஆகையால் கலைஞர் ஆட்சியில் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட 6வது ஊதியக்குழுவின் ஒரு நபர் குழுவால் வழங்கப்பட்ட ஊதிய விகித்தினை அதற்கேற்ப 7வது ஊதிய விகிதத்திற்கு மாற்றியமைத்து பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: