கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு; வினாடிக்கு 557 கன அடி நீர் வருவதால் மேலும் உயர வாய்ப்பு; 5 ஏரிகளில் 6.73 டிஎம்சி நீர் இருப்பு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வினாடிக்கு 557 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது, 5 ஏரிகளில் 6.73 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழை நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இதை தவிர்த்து தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தவணை காலங்களில் 7.6 டிஎம்சி நீர் மட்டும் தான் வந்தது. எனவே, மீதமுள்ள 4 டிஎம்சி நீரை பெறும் வகையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த 14ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 16ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து படிப்படியாக நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில் விவசாயிகள் தண்ணீர் எடுப்பதால் 400 கன அடிநீர் வருவதே சிரமமாக இருந்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆந்திர நீர்வளத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 557 கன அடி வீதம் தமிழக எல்லைக்கு கூடுதலாக திறக்கப்பட்டது. இதன் காரணமாக  3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 493 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த ஏரிகளும் நிரம்பி வருகிறது.

* ஏரிகளில் நீர் மட்டம் எவ்வளவு?

 3300 மில்லியன் கன அடி  கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2621 மில்லியன் கன அடியும், 1081 மில்லியன்  கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 587 மில்லியன் கன அடியும், 3645  மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2613 மில்லியன்  கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்  கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 424 மில்லியன் கன அடி என 5 ஏரிகளில்  மொத்தம்  6.73 டிஎம்சி அதாவது 6738 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  இந்த நீரை கொண்டு 6 மாதங்களுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்ய முடியும்.

Related Stories: