நெடுஞ்சாலைத்துறையில் முதன்மை இயக்குனர் பணியிடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை ஆய்வாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் முதன்மை இயக்குனர் பணியிடத்தில் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை ஆய்வாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர் பணியிடம் உள்ளது. இதில், ஒரு பணியிடம் முதன்மை இயக்குனர் பணியிடம். இப்பணியிடம் நிர்வாக பணி சார்ந்தது. ஆனால், இப்பணியிடத்திற்கு நெடுஞ்சாலை பொறியியல் பணி விதி அடிப்படையில் உதவி பொறியாளர் நிலையில் இருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று இப்பணியிடத்திற்கு வருகிறார்கள். சுமார் 40 ஆண்டுகள் இவ்விதிகள் மாற்றப்படாமல் உள்ளது.

இதனால், நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்களுக்கு சாதகமாகவும் மற்ற பணியாளர்களுக்கு பாதகமாகவும் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகள் உள்ளது. மேலும், சில பொறியாளர்கள் அரசு விதியை மீறினாலும் நடவடிக்கை இல்லாமல் தப்பி விடுகின்றனர். இதன் உண்மை தன்மையை அறிய கடந்த 5 ஆண்டுகளின் துறையில் உள்ள பள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் தெரிய வரும். துறையில் பொறியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வுகள் அதிகமாகவும், மற்ற பணியாளர்களுக்கு மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வரும்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பணியிடத்தை இந்திய ஆட்சி பணி அலுவலர் ஐஏஎஸ் நிலைக்கு தரம் உயர்த்தி நிர்வாக இயக்குனர் என்ற பெயரில் மாற்ற வேண்டும். மேலும், இணை இயக்குனர் நிர்வாகம் என்ற பணியிடத்தை மாற்றம் செய்து இணை நிர்வாக இயக்குனர் என பெயர் மாற்றம் செய்து இப்பணியிடத்தை உதவி கலெக்டர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். தமிழக முதல்வர் நெடுஞ்சாலைத்துறையில் கொண்டு வர நினைக்கும் மாற்றத்திற்கு நெடுஞ்சாலைத்துறை தலைவராக ஐஏஎஸ் அதிகாரி வந்தால் மட்டுமே நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: