காவல்துறை சார்பில் குறும்படம் வெளியீடு; குமரியில் கஞ்சா போதையில் இருந்து மீள இளைஞர்களுக்கு கவுன்சிலிங்: எஸ்.பி. அதிரடி திட்டம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போதையில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு காவல்துறை சார்பில் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறினார். குமரி மாவட்டத்தில் மதுவை விட கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இளம் சிறார்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதன் விளைவு, பல மாணவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி உள்ளது. படிப்பு முடித்த பல இளைஞர்களும் அதிகளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி தற்போது, கஞ்சா விற்பனையாளர்களாக மாறி உள்ளனர்.

சமீபத்தில் கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரட்டை கொலை சம்பவம் நடந்தது. இதையடுத்து கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து, கஞ்சா விற்பனை நடப்பதும் கண்டறியப்பட்டது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் சந்தேகம் வராத வகையில் கஞ்சா கை மாறுகிறது. ஊரடங்கு சமயத்தில் போக்குவரத்து இல்லாத நிலையிலும் அதிகளவில் கஞ்சா சப்ளை நடந்தது. தற்போது காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் 60க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் இளம் சிறார்கள் ஆவர். இதுவரை எந்த வழக்கிலும் சிக்காத பலர் தற்போது கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கி உள்ளனர். இதனால் இவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் பலர் கஞ்சாவுக்கு சமீபத்தில் அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாக கூறினர். இந்த நிலையில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சீரழிகிறது என்பதை விளக்கும் வகையில், குமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களின் நிலை என்ன? அந்த பழக்கத்துக்கு அடிமையாகாத இளைஞர் எவ்வாறு வாழ்வில் உயருகிறார் என்பதை விளக்கும் வகையில் அந்த குறும்படம் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள ஒரு கிராமத்தில் 3 இளைஞர்கள் உள்ளனர். நண்பர்களான இவர்களில், 2 பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். ஆனால் ஒரு இளைஞர் நல்ல முறையில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுகிறான். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான நண்பன், கடைசியில் பெண்களிடம் வம்பு செய்து காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறான்.

அவனது உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவனது பெற்றோர் பரிதவிப்புக்கு உள்ளாகிறார்கள். போதை பழக்கம் எவ்வாறு தீங்கு ஏற்படுத்துகிறது என்பதை சுமார் 5 நிமிட காட்சியில் தெளிவாக விளக்கி உள்ளனர். இந்த குறும்படத்தை நேற்று எஸ்.பி. பத்ரி நாராயணன்  வெளியிட்டு, இந்த குறும்படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரித்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறுகையில், போதை பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்வு சீரழிகிறது. கஞ்சா, ஹெராயின் போன்ற பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

விளையாட்டு தனமாகவும், நண்பர்களின் வற்புறுத்தலாலும் கஞ்சா போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் பலர் தவிக்கிறார்கள். இது போன்றவர்களை மீட்டெடுக்க காவல்துறை சார்பில் கவுன்சிலிங் கொடுக்கப்படும்.

 தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இளைய சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும். எனவே காவல்துறை உருவாக்கி உள்ள ஹெல்ப்லைன் எண்ணான 70103 63173 க்கு பொதுமக்கள் போதை ெபாருட்கள், திருட்டு மது விற்பனை, சமூக விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Stories: