5 ஆண்டுகளாக தொடரும் அவலம் இருளில் மூழ்கிய நைனார் குப்பம்: அச்சத்துடன் வாழும் மக்கள்

செய்யூர்: நைனார்குப்பம் பகுதியில் உள்ள தெருக்களில், விளக்குகள் எரியாமல் கடந்த 5 ஆண்டுகளாக இருளில் மூழ்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் வாழ்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி 1வது வார்டில் நைனார் குப்பம் உள்ளது. இப்பகுதியில் உள்ள 7 தெருக்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், 7 தெருக்களிலும் 250 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், இதில் 60 கம்பங்களில் மட்டுமே மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. மற்ற கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தவில்லை. இதற்கிடையில், கம்பங்களில் பொருத்தப்பட்ட பல மின் விளக்குகள், தற்போது பழுதாகி அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளன. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது.

இதையொட்டி, வெளியிடங்களில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள், தினமும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர், பல்வேறு  சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அப்போது இருந்த அதிமுக  பிரமுகர்கள் உடந்தையாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் பரபரப்பு புகார்  கூறுகின்றனர்.

மேலும், இப்பகுதியில் பாம்பு, தேள் உள்பட பல்வேறு விஷ பூச்சிகள் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருவதால், அப்பகுதி மக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து தெருக்களிலும் தெரு மின் விளக்குகள் பொருத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை முறையாக பராமரிக்க வேண்டும். இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: