மதுரையில் 6 குழந்தை பெற்ற பெண்ணிடம் விசாரணை விற்கப்பட்ட 3 குழந்தைகள் அதிரடியாக மீட்பு

மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலையோரம் வசிப்பவர் சித்ரா (38). கடந்த 2005ல் இவருக்கு திருமணமானது, 3 குழந்தைகள் பெற்றெடுத்தார். முதல் கணவர் உயிரிழந்ததால், வேறொருவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த 2வது நபருக்கும் 3 குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை இறந்த நிலையில் மற்ற குழந்தைகள் மாயமானதாகவும், சித்ரா தற்போது ரோட்டோரத்தில் வசித்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மதுரை போலீஸ் தனிப்படையினருடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் கொண்ட குழுவினர் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

சித்ரா சாலையோரம் படுத்திருந்தபோது, மர்ம நபர்கள் சித்ராவின் 2 குழந்தைகளை திருடிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசில் சித்ரா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாயமான குழந்தைகளை தேடி வருகின்றனர். இதற்கிடையில் 4, 5வது குழந்தைகள், இரட்டையர்களாக பிறந்துள்ளன. இதில் சஞ்சனா என்ற குழந்தை சித்ராவின் உறவினர் ஒருவரிடமும், ஹரிஸ்ரீ என்ற குழந்தையை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எடுத்துச் சென்றதாகவும் தெரிய வந்தது. 6வது குழந்தையான வர்னிகா பாண்டியை(2), மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள பாலச்சந்திரன் - கலாநிதி தம்பதி வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர், நேற்று தம்பதியிடமிருந்து குழந்தை வர்னிகா பாண்டியை மீட்டனர். இதற்கிடையில், பாலச்சந்திரன், கலாநிதி தம்பதியினர், அந்த குழந்தை தங்கள் குழந்தைதான் என்று பலதரப்பட்ட ஆவணங்களை காட்டினர். இவர்களை மதுரை அவனியாபுரம் போலீசார் நேற்று விசாரித்தபோது, அவர்கள் ஆதார் அட்டை, மருத்துவ சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை காட்டினர். ஆனால், அந்த சான்றுகளை போலியாக பெற்றுள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், 2 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சித்ராவின் உறவினர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த பெண்ணிடமிருந்த 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு, எல்லீஸ் நகர் தத்தெடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. 3 குழந்தைகளையும் சித்ராவே விற்பனை செய்திருக்கலாமா, அல்லது ஏஜன்ட்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்த விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தாய் சித்ராவிடம் குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விசாரித்தனர். இவர்களின் பரிந்துரையின்பேரில், சித்ராவிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: