குழந்தைகள் விற்பனை வழக்கில் தேடப்பட்ட காப்பக உரிமையாளர், நிர்வாகி கைது: தேனி மாவட்ட எல்லையில் சிக்கினர்; மதுரையில் விடிய விடிய விசாரணை

மதுரை: குழந்தைகள் விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை காப்பக உரிமையாளர், நிர்வாகி இருவரையும், தேனி மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்தபோது, தனிப்படையினர் கைது செய்தனர். மதுரை ரிசர்வ் லைனில் உள்ள ‘இதயம் டிரஸ்ட்’ காப்பகத்தில் ஒரு வயது குழந்தை மாணிக்கத்தை காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து, கொரோனாவில் இறந்ததாக கூறி விற்பனை செய்தனர். இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்து மாணிக்கம், தனம்மாள் (2) ஆகிய இரு குழந்தைகளை மீட்டனர். காப்பக ஊழியர் கலைவாணி (36), குழந்தை விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட மதுரையை சேர்ந்த செல்வி (45) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பக உரிமையாளர் சிவக்குமார், நிர்வாகி மதார்ஷா ஆகிய 2 பேரும் தலைமறைவான நிலையில், கடந்த 5 நாட்களாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

காரில் தப்பிச் சென்ற இவர்கள் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இங்கு தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதற்கிடையில், தேனி மாவட்ட எல்லையான போடிமெட்டு பகுதியில் சிவக்குமார், மதார்ஷா இருவரும் பதுங்கியிருந்த தகவல் தனிப்படையினருக்கு தெரிந்தது. இதன்பேரில் நேற்று தனிப்படையினர் விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரையும் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இவர்களை மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

பெண்களுடன் தொடர்பு...: முன்னதாக, காப்பக உரிமையாளர் சிவக்குமார் கடந்த 2017-2018ல் ஈரோட்டில் குழந்தைகள் காப்பக கிளை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து காப்பகம் மூடப்பட்டது. இதன்பேரில் தனிப்படை போலீசார் ஈரோட்டில் முகாமிட்டும் சிவக்குமார் மீது அங்கு ஏதேனும் புகார்கள் உள்ளதா? என்பது குறித்த விசாரணையையும் வேகப்படுத்தினர். இதற்கிடையே சிவக்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு பெண் தொடர்புகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்ததில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த 3 மாதமாக இவர்கள் பிரிந்திருப்பதாகவும் தெரிகிறது.

எனவே சிவக்குமாரின் பெண் தொடர்பு குறித்த விசாரணையையும் போலீஸ் வேகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தைகளை விற்ற வழக்கில் கைதாகி உள்ள காப்பக ஊழியர் கலைவாணி, புரோக்கர்கள் செல்வி, ராஜா உள்ளிட்டோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் தற்போது சிவக்குமார், மதார்ஷா சிக்கியதால், இவர்களிடம் நடத்தும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்? யார் யார் உதவியாக இருந்தார்கள் என்பது குறித்தும் தெரியவரும்.

Related Stories: