சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 3 மாதத்தில் மீட்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், நிர்வாக ஆணையர் நாகராஜன், கூடுதல் ஆணையர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பட்டா வழங்கியதில் முறைகேடு, ஆக்கிரமிப்பு, போலி பட்டா தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளது. இதுபற்றி  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களை 3 மாதத்திற்குள் மீட்கவும், யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு இடங்களுக்கான குத்தகைதாரர்கள் நிறைய பேர் பணம் கட்டவில்லை. அவர்களுக்கு 15 நாள் நோட்டீஸ் கொடுத்து, அதன்பிறகும் பணம் கொடுக்கவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளோம். நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு உடனடியாக காலி செய்ய வேண்டும்.

பட்டா மாற்றம், முன்பு பேப்பரில் எழுதி கொடுக்கப்படும். இப்போது, கணினிமயமாக்கப்பட்டுள்ளது. முன்பு, ஒருவர் நிலம் வாங்கி 50 பிளாட் போட்டால் அனைத்தும் ஒருவர் பெயரில் இருக்கும். இப்போது அப்படி இல்லை. யார் யார் நிலத்தை பதிவு செய்கிறார்களோ அவர்கள் பெயருக்கு போய்விடும். இதன்மூலம் உடனடியாக பட்டா கிடைக்கும். தேர்தலில் அறிவித்தபடி, முதியோர் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை முதல்வர்தான் விரைவில் அறிவிப்பார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: