திருமுல்லைவாயலில் சாலை, மழைநீர் கால்வாய் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை மனு

ஆவடி: ஆவடி மாநகராட்சி 8வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளருமான முல்லை பலராமன் பொது நலச்சங்கங்களின் சார்பில் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி தொகுதி எம்எல்ஏவுமான ஆவடி சா.மு.நாசரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஆவடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியான சரஸ்வதி நகர், முருகப்பா காலனி, சிவசக்தி நகர், வடக்கு தென்றல் நகர், முல்லை நகர், தேவி ஈஸ்வரி நகர், தென்றல் நகர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட், தார்சாலை, மழைநீர் கால்வாய் வசதிகள் அமைக்க பல மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.

மேலும், திருமுல்லைவாயல் காலனி, லட்சுமி நகர், வடக்கு தென்றல் நகர், ஐயப்பன் நகர், அம்மன் அவென்யூ, சரஸ்வதி நகர் விரிவாக்கம் அம்பேத்கர் நகர் விரிவாக்கம், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட நகர்களில் பாதாள சாக்கடை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளவில்லை. மேலும், திருமுல்லைவாயல் காலனி, சர்வே எண் 304, 305 ஆகியவற்றிற்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை. எனவே, மேற்கண்ட நகர்களில் மக்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனையடுத்து, அமைச்சர் நாசர் தார், சிமென்ட் சாலை, மழைநீர் கால்வாய் வசதிகள், பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Related Stories: