லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டு வசதியுடன் திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர பணி விரைவில் துவங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை  ஆய்வு செய்தார். அப்போது, லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டு வசதியுடன் ராஜகோபுர பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார். ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து, கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

திருத்தணி மலைக்கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்தை பார்வையிட்டார். பின்னர் படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்கு நடந்து சென்றார். அவரை, இணை ஆணையர் பரஞ்ஜோதி, பூர்ண கும்ப மரியாதையுடன் அழைத்து சென்றார். பின்னர் ஒவ்வொரு சன்னதியிலும் நின்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் திருத்தணி முருகன் கோயிலில் அடிக்கல் நாட்டப்பட்ட ராஜகோபுர பணி முழுமை பெறாமல் உள்ளது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க தொல்லியல் துறையின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து, ராஜகோபுர கட்டுமான பணிகளை விரைவில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி மலைக்கோயில் அருகே கார் பார்க்கிங் பகுதியில் இருந்து மலைக்கோயில் செல்வதற்கு லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகள் அமைக்கப்படும். பக்தர்கள் தங்கும் குடில்களை சீரமைக்கும் பணி நடைபெறும். மலைக்கோயிலில் திருமணம் அதிகமாக நடைபெறுவதால், அங்கு போதிய இடவசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

அங்கு கூடுதலாக திருமணம் நடைபெறுவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் திருத்தணி மலைக்கோயிலில் இருந்து சித்தூர் சாலையை இணைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலைப்பணி துவங்கியது. அது வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், சாலை சீரமைப்புக்கு ஆட்சேபித்தனர். அச்சாலை சீரமைப்பு பணிகளை மீண்டும் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: