அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை பெசன்ட்நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு கொடுத்தார். புகார் மனுவில் மணிகண்டனுடன் தான் 5 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும் 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் மணிகண்டன் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை சாந்தினி புகார் தெரிவித்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடிகை அளித்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி ஆன நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி ஆன நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்; தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்றும் திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை என்றும் கடனாக கொடுத்த ரூ.5 லட்சம் ரூபாயை திரும்பக் கேட்டதால், பிரச்சனை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former Minister Manikandan) வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: